சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே ! ஆய்வு

சிவபெருமானின் அமுதத்துளியால் சிந்தியருளிய மாமதுரை
October 2, 2018

சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே ! ஆய்வு

ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) 94 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதை நிறுவ முடியும் என்கிறார் ஒடிஷா மாநில கூடுதல் தலைமைச் செயலரும் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன்.

சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் The Pot Route: from Indus to Vaigai என்ற தலைப்பில் இது தொடர்பாக உரை நிகழ்த்திய ஆர்.பாலகிருஷ்ணன், கே. சிந்துச் சமவெளி ஆய்வு முடிவுகள் வெளியாகி 94 ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

இந்த நாகரிகம் குறித்த செய்திகள் வரும் முன்பாக நம்முடைய புரிதல் வேறு மாதிரி இருந்தது. இப்படி ஒரு நாகரிகம் இருந்ததே தெரியாது. அது தெரிந்த பிறகுதான் இந்திய வரலாற்றை வேறு மாதிரி பார்க்கும் பழக்கமே ஏற்பட்டது. ஆய்வு முடிவு வெளிவந்தபோதே இது திராவிட நாகரிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறதென அப்போதே சொல்லப்பட்டது. அதற்குப் பிறகும் பலரும் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். சாட்டர்ஜி, கிராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற பல ஆய்வாளர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது பல்துறைகளைச் சேர்ந்த ஆய்வுகள், அதில் கிடைத்த தரவுகள் மூலமாக இது ஒரு திராவிட நாகரிகமாக இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு உண்டு என்று சொல்வதையெல்லாம் தாண்டி, இது ஒரு திராவிட நாகரிகமே என்று சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் தரைக்குள் இப்படி ஒன்று இருந்தது தெரியாத காலகட்டதில் நம் நாகரிகத்தைப் பற்றிச் சொல்ல இலக்கியங்கள் மட்டுமே இருந்தன. அப்போது வெளிநாட்டு ஆய்வாளர்களால் படிக்கக்கூடிய வகையில் இருந்தது வடமொழி இலக்கியங்கள்தான். அதனால், இந்தியப் பண்பாட்டின் துவக்கத்தை வேதத்திலிருந்து துவங்கும் பழக்கம் இருந்தது.

வேதகால நாகரிகத்திற்கு முன்பாக வசித்தவர்கள் பண்பாடற்றறவர்கள் போலவும் அதற்குப் பிறகுதான் பண்பாடு வந்ததுபோலவுமே வரலாறு அணுகப்பட்டது. ஆனால், 4,500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மிகப் பெரிய நகரம் இருந்தது, அது தரையில் புதைந்து கிடந்தது என்பது தெரிந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது.

யானை சென்ற பாதையைவைத்து யானைத் தடத்தைக் கண்டுபிடிப்பதுபோல, இது பானைத் தடம். Silk route, Spice route என்றெல்லாம் இருப்பதைப் போல இது Pot Route என்பதை நாங்கள் முன்வைக்கிறோம். ஹரப்பாவில் கிடைத்த பானை வகைகளில் பெரும்பாலானவை கறுப்பு – சிவப்பு வண்ணம் கொண்டவை. ஆனால், கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கிடைத்தவை வண்ணம் தீட்டப்பட்ட பழுப்பு நிற மண் பாண்டங்கள். ஆனால், ஹரப்பாவுக்கு தென்பகுதியில் குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் கிடைப்பது எல்லாமே கறுப்பு – சிவப்பு வண்ணம் கொண்டவைதான். ஆனால், வரலாற்றாளர்கள், இதனை முதுமக்கள் தாழியோடு தொடர்புபடுத்தி பெருங்கற்கால மட்பாண்டங்கள் என்று ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். அதற்கு மேல் ஏதும் நடப்பதில்லை. இப்போது நாங்கள் முதல் முறையாக ஒரு மேப்பை தயார் செய்து, painted greyware என்ற பழுப்பு நிற பானை ஓடுகள் கிடைத்த கங்கைச் சமவெளியைச் சுற்றி, கறுப்பு – சிவப்பு வண்ண பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரம்தான் சூழ்ந்திருந்தது; ஆகவே இந்த கறுப்பு – சிவப்பு வண்ணப் பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரத்தின் தொடர்ச்சியை ஆராய வேண்டுமென்ற கருத்தை முன்வைத்திருக்கிறோம்.

பானைகள் புலம் பெயர்ந்து வந்திருக்க முடியுமா?

சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்ததைப் போன்ற பானை ஓடுகள் கீழடியிலும் கிடைத்திருக்கின்றன. பானைகள் புலம் பெயர்ந்து வந்திருக்க முடியுமா? ஒவ்வொரு பானைக்கு பின்னாலும் ஒரு பானை செய்பவர் இருக்கிறார். அவருடைய சமூகப் பின்புலத்தை ஆராய வேண்டும். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் பானை செய்பவர் என்னவாக அழைக்கப்பட்டிருப்பார் என்பது தெரியவில்லை. ஆனால், அவருடைய இடம் முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இம்மாதிரி ஒரு நகரத்தில் செங்கல் சூளை வைத்திருந்தவர்கள், பானை செய்பவர்கள் ஆகியோருக்குத்தான் முக்கியத்துவம் இருந்திருக்கும். அதுபோன்ற ஒரு முக்கியத்துவத்தை பானை செய்பவர்களுக்குக் கொடுத்த இலக்கியம் சங்க இலக்கியம்தான்.
சங்க இலக்கியத்தில் பானை செய்யும் குயவனை முதுவாய்க்குயவ என்று அழைக்கிறார்கள். அதாவது நீண்டகால அறிவைக் கொண்ட குயவர் என்று பொருள். இந்த நீண்டகால அறிவு என்பது எதைக் குறிக்கிறது? அதுதான் அந்த நாகரிகத்தின் ஆழம். அதேபோல முதுமக்கள் தாழி செய்யும் குயவரை கலம்செய் கோவே என்கிறார்கள். அதாவது பானை செய்பவரை தலைவன் என்று அழைக்கும் சமூகப் பண்பாடு அப்போது இருந்திருக்கிறது. இந்த சமூகப் பண்பை நாம் மறுக்க முடியாது. இந்த சமூகப் பண்பு வட மாநிலங்களில் உள்ள சமூகப் பண்புக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

குயவர்களுக்கு இருக்கக்கூடிய குலப் பெயர்கள், வம்சாவழிப் பெயர்கள், குடிப் பெயர்கள், சாமி பெயர்கள், கோவில் பெயர்கள் எல்லாமே அந்தப் பாதை நெடுக இருக்கிறது. பானை என்பது அந்தப் பானை மட்டுமல்ல. அந்த பானை, அதைச் செய்பவர் சார்ந்த சமூகம்.

சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே !

இந்தியாவில் கிடைத்த பானைகளில் 80 சதவீதம் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கிறது. எழுத்துகள் எழுதப்பட ஆரம்பித்ததே பானைகளிலாகத்தான் இருக்க முடியும். கஷ்டப்பட்டு கற்களில் எழுதியிருக்கலாம். ஆக, எழுத்து வரிவடிவம் ஆகியவை ஆரம்பித்ததே பானைகளில்தான். இம்மாதிரி எழுதுவது சிந்துச் சமவெளியிலும் தமிழகத்திலும் அதிகமாக இருக்கிறது. சங்க இலக்கியத்தில் இது குறிப்பிடப்படுகிறது. பீடும் பெயரும் எழுதி என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியாக பானைகளில் எழுதியது நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதியது கிடைக்கிறது. இது ஒரு தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. இதைத்தான் நான் சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று சொல்கிறேன். சிந்துவெளி எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது சங்க இலக்கியம் பேச ஆரம்பிக்கிறது. சங்க இலக்கியம் பேசும் நிகழ்வுகள் எல்லாம் அப்போதைய நிகழ்கால நிகழ்ச்சிகள் அல்ல.

கலாசாரம் நிலங்களைக் கடந்து பயணிக்கும்

ஆஃப்கானிஸ்தானில் சார்த்துகை என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம் மொஹஞ்ச-தரோவிலிருந்து வட மேற்கில் 1900 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. செல்வதற்கான பாதையே மிகக் கடினமான பாதை. அந்த சார்த்துகையில் லாபஸ் லாஜுலி என்ற விலை உயர்ந்த கற்கள் கிடைக்கும். அவற்றை வைத்து அணிகலன்களைச் செய்வதற்காக சிலர் அங்கே குடியேறினார்கள். அங்கேயும் இதேபோல பானைகளைச் செய்தார்கள். அதை இப்போது ஹரப்பிய நாகரிகம் என ஒப்புக்கொள்கிறோம். மொஹஞ்ச-தரோவுக்கும் கீழடிக்கும் இடையில் கிட்டத்தட்ட அவ்வளவு தூரம்தான் இருக்கும். இந்த இரு நிலப்பரப்பிற்கும் இடையில் தொடர்ச்சி இருக்கிறது.
மகாராஷ்டிரா, குஜராத் குயவர்களுடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் தென்னிந்திய குயவர்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆக பழக்க-வழக்க தொடர்புடன் இலக்கியத் தொடர்பும் இருக்கிறது. இவற்றைத் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது என்கிறார்.